Wednesday, April 23, 2008

எனது கடவுள்
ஆச்சரியமாக இருக்கும் உனக்கு! '

இங்கே நிம்மதி' கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயத்தில்
'கடவுளை நம்பாதே' என்றேன்.

இரண்டாவது அத்தியாயத்தில்
கடவுள் தேவையா எனக் கேட்டேன்.
இப்போது... 'எனது கடவுள்' என்கிறேன்.

பலருக்கும் ஒரு கடவுள் இருப்பதைப் போல.....அல்லது பலரும் ஒரு கடவுளை வைத்திருப்பதைப் போல...நானும் ஒரு கடவுளை வைத்திருக்கிறேன்.

எனது கடவுள் தன்னைத் துதி பாடுவதை விரும்புவதில்லை. அதை...ஊக்குவிப்பதுமில்லை.

வெறுப்பின் உச்சத்தில் அவரை நான் திட்டும் போதெல்லாம்....' எள் ' அளவுக்குக் கூட என்னை அவர் வெறுத்ததில்லை. தண்டிக்க நினைத்ததுமில்லை.

அளவுக்கு அதிகமாக அவரை நான் போற்றினாலும்...எனக்கு என்ன 'அளவு'... எது எது வந்து சேர வேண்டுமோ...அதை அதை அப்படியே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறார்.

அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்.

அதே போல... அளவுக்கு அதிகமாக அவரை நான் தூற்றினாலும்...எனக்குக் கிடைக்க வேண்டிய பொக்கிஷங்களை ஒரு போதும் அவர் பூட்டி வைத்ததில்லை.

தண்டனை நோக்கில் என் துன்பச் சுமைகளை அவர் அதிகமாக்கியதில்லை.

24 மணி நேரமும் அவர் பார்வை என் மீது பதிந்து கொண்டிருக்கின்றது.

நான் 'பலம்' என நினைத்துக் கொண்டிருக்கின்ற எனது பலவீனங்கள்...நான் பலவீனம் என நினைத்து கொண்டிருக்கின்ற எனது பலம்....அனைத்தையும் அவன் அறிவான்.

எனக்குள் இருக்கும் ஞானி....புத்திசாலி....கர்மயோகி ஆகியோரை மட்டுமல்ல, எனக்குள் மறைந்திருக்கும் முட்டாள், பச்சோந்தி,கோழை,ஏழை...எல்லோரையும் அவன் நன்கறிவான்.

நான் அழுதாலும்..தொழுதாலும் அவன் தனது கணக்கை மாற்றிப் போட்டதில்லை.

நேர்த்திக் கடன்களினால் அவனை உருக வைக்க முடியாது.

படையல்களினால் அவனைப் படிய வைக்க முடியாது.

நேர்த்திகளில் சிக்கி தன் கீர்த்தியை அவன் குறைத்துக் கொள்வதில்லை.

கதறி அழுதாலும்....கடும் விரதம் இருந்தாலும்....அவனை உதறி எறிந்தாலும்...எனக்குக் கிடைக்க வேண்டியது எதுவோ அதை மட்டுமே எனக்குக் கிடைக்க வைக்கிறான். மற்றவற்றை மறைத்து வைக்கிறான்.

நேர்த்திக் கடன்களைப் பார்த்து அவன் சமாதானம் ஆவதில்லை.

மலிவான நேர்த்திகளில் மயங்கி...தனது கீர்த்திகளை கீழிறக்க அவன் சம்மதிப்பதில்லை.

போற்றிப் பாடி குளிர்வித்தால், உருகுவதற்கும்....தூற்றினால், துன்புறுத்துவதற்கும் அவன் ஒன்றும் மானிடன் அல்லவே!

எனது பிரார்த்தனைகளைத் தவிர, எனது மற்றைய அத்தனை செயல்களையும் அவன் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

எனது செயல்களால் விளையும் நன்மை தீமைகளை அவன் அறிவான்.

ஆனாலும் அந்த நன்மை தீமைகளை வைத்து எனது நன்னடத்தைக்கு அவன் புள்ளிகளை வழங்குவதில்லை.

எனது செயல்களினால் வரும் விளைவுகளை மட்டுமன்றி....அந்த செயல்களை நான் செய்து கொண்டிருப்பதற்கான காரணம், சந்தர்ப்பம், சூழல்...ஆகியவற்றையும் அவன் கூர்மையாக ஆராய்கிறான்.

எனது சூழலையும், எனது செயல்களின் நோக்கங்களையும் ஆராய்ந்து எனது தவறான செயலுக்குக் கூட அவன் பொது மன்னிப்பு வழங்கியதுண்டு.

தயவு தாட்சண்யமின்றி தண்டனைகளும் தந்ததுண்டு.

எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

ஆனாலும் அவனிடம் ஒரு 'ஒழுங்கு' இருக்கின்றது.

மாணவர்களுக்கு 'அளவையியல்' என்ற பாடத்தை நான் போதித்த போது...அதில் 'வரைவிலக்கணம்' என்று ஒரு பாடப் பிரிவு வரும்.

வரைவிலக்கணம் என்றால் என்ன? என்ற மாணவர்களின் கேள்விகளுக்கு நான் பதில் தந்திருக்கிறேன்.

ஆனால் ஆண்டவனின் வரைவிலக்கணம் என்ன? என்ற எனது கேள்விக்கு, எந்த ஒரு மகானாலும் இன்றுவரை எனக்குத் தெளிவான பதிலைத் தர முடியவில்லை.

ஆனாலும்...அவனுக்கு வரைவிலக்கணம் உண்டு...அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அவனும் சில சமயங்களில் என்னைப் போலவே இலக்கணங்களை மீறியும் இயங்குவதுண்டு.

'விழுந்து எழுந்து நட' என்று தான் பல சமயங்களில் அவன் எனக்குப் போதிக்கிறான்.

எனக்கு அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ....என்னை அவன் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான்.

'பிடிப்பது.... நீ கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக' என்கிறான்.

நான் எழுந்து விடாமல் இருப்பதற்காகவும் அவன் என்னைப் பிடித்து அழுத்துவதுண்டு.

நிழல் தரும் மரமாகவும் என்னைத் தொடருகிறான்.
வெயிலாகவும் என்னை விரட்டுகிறான்.

என்னைத் தனியே விடு...தெளிய விடு என்றால்...என் பாதையிலே குறுக்கிட்டு குழப்பம் கூட்டுகிறான்.

'குழப்பத்தில் இருந்து தெளிவுக்கு வா' என்கிறான்.

'...அல்லது தெளிவில் இருந்து குழப்பத்திற்குப் போ' என்கிறான்.

'இந்த இரண்டுக்கும் மாறி மாறிப் போய் வருவது தான் வாழ்க்கை' என்கிறான்.

' இப்போது தான் 'நீலி பிருங்காதி' எண்ணெய் தடவ ஆரம்பித்திருக்கிறேன்.வேறு சப்ஜெக்ட் பேசலாமே...'என்றேன் அவசரமாக.

எதுவானாலும் கேள் என்றான்.

எங்கே நிம்மதி? என்றேன்.

'பொன்னைத் தேடு..பொருளைத் தேடு..புகழைத் தேடு...ஆனால், நிம்மதியை மட்டும் தேடாதே.'

'ஏன்?'

'அது தேடிக் கிடைக்கும் பொருள் அல்ல.'

'பின்னே..எப்படிக் கிடைக்கும்?'

'எதையும் அதுவாக ஏற்றுக் கொள்....எதிலிருந்தும் தப்பிக்க நினைக்காதே....அது தான் நிஜமான நிம்மதி.'

'ஆனால் எனக்குத் தேவைப்படுவது பூரண நிம்மதி சுவாமி'

'உன்னை உணர்வது நிம்மதியின் முதல் படி.

உனது சூழலை உணர்வது...நிம்மதியின் இரண்டாவது படி.

உனது கடமைகளை நிறைவேற்றப் போராடுவது...நிம்மதியின் மூன்றாவது படி.

இந்த மூன்று படிகளையும் நீ தாண்டும்போது பரி பூரண நிம்மதியின் பரம சன்னிதானம் உனக்காகத் திறக்கப்படும்'.

'இவ்வளவு தானா சுவாமி!...இதைத் தான் நான் இத்தனை காலமும் செய்து கொண்டிருக்கிறேன்.ஆனாலும், நிம்மதி இல்லையே?...'

'நீ நிம்மதி என்று நினைத்துக் கொண்டிருப்பது சந்தோஷம்....உல்லாசம்....சொகுசு....சோம்பல்...ஓய்வு,உறக்கம்..

ஆனால்,உண்மையான நிம்மதி அதுவல்ல.'

'பின்....எது சுவாமி?'

'இயக்கம்....இயக்கம்...இடை விடாத இயக்கம்..

உனது கடமைகளை நிறைவேற்ற இயங்கு...

உனது கடமைகளை நிறைவேற்றப் போராடு..

இந்த இயக்கமும்,போராட்டமும் தான் நிஜமான நிம்மதி.

உனது கடமைகளுக்காக உழைப்பதும் தேய்வதும்,ஜெயிப்பதும் தோற்பதும்,விழுவதும் எழுவதும் தான் நிஜமான நிம்மதி' என்றார் கடவுள்.

சரி..உனது கடவுளின் பெயர் என்ன? என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.

எனது கடவுளுக்கு உருவம் இல்லை.கோவிலும் இல்லை.

மதம் இல்லை.

ஆண் பெண் என்ற பால் பேதமும் இல்லை.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

அவர் பெயர்.....'சத்தியம்'.

[தொடரும்]

No comments: