Wednesday, April 23, 2008

கடவுளை நம்பாதே


எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி... என்று நிம்மதியைத் தேடித் தேடித் தேய்ந்து போனவர்களுக்காக, உண்மையான நிம்மதி எங்கே இருக்கின்றது என்பதை இனம் காட்டும் வண்ணம் ஒரு கட்டுரைத் தொடரை நீ எழுத வேண்டும் என்று சிட்னியில்...இருக்கும் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைக் கேட்பதுண்டு.

எப்போது நான் நிம்மதியுடன் இருப்பதாக நம்புகிறேனோ அப்போது அதை எழுதுகிறேனே....என்றேன்.

நண்பர் விடவில்லை.

'பணம் உள்ளவனை விட பணம் இல்லாதவனால் தான் பணத்தின் அருமை பற்றி பக்கம் பக்கமாக பேச முடியும்.
நிம்மதி உள்ளவனை விட...நிம்மதியைத் தேடிக் கொண்டிருப்பவனால் தான் நிம்மதி பற்றி இறங்கி வந்து நடைமுறைத் தெளிவுடன் பேச முடியும்.இந்த ஒரு தகுதியே உனக்குப் போதும் உடனே எழுது' என்றார்.

அவர் என்னை உலுக்கிய உலுக்கலில்,எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த சில வைரங்கள் வெளியே விழுந்தன.

நிமிர்ந்தேன்.

அதை விட அதிகமாக குப்பைகளும் விழுந்தன.

குனிந்தேன்!

கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆராய்ச்சி இங்கே அவசியமற்றது.
ஆனால், கடவுளை நம்பினால் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் அர்த்தமற்றது.

கண்ணுக்குத் தெரிகின்ற உன் உறவுகளும், நண்பர்களும்,சமூகமும் தராத நிம்மதியை கண்ணுக்குத் தெரியாத ஒன்று உனக்கு தரும் என்று நீ நம்புகிறாய். கடைசிவரை நம்பிக்கொண்டே நாட்களை நகர்த்துகின்றாய்.

ஆனாலும், வ்ழிக்கு வழி எங்கே நிம்மதி ...எங்கே நிம்மதி...என்றும் ஏங்குகிறாய்.

நீ நம்பிய கடவுள் ஏன் அந்த நிம்மதியை உனக்குத் தரவில்லை?

எங்கே கோளாறு?

எப்போதாவது ஆற அமர்ந்து உட்கார்ந்து உனக்குள் அலசியிருக்கிறாயா?


நிம்மதி என்றால் சந்தோஷம் என்றும், பிரச்சனைகள் இல்லாத நிலை என்றும், சுகம், சொகுசு என்றும் நீ நினைத்திருப்பாய்.

கடவுள் மீது நம்பிக்கை வைத்தால்...இவை எல்லாமே உனக்குக் கிடைக்கும் என் எதிர்பார்த்தாய்....எதிர்பார்க்கிறாய்.

இப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை என்பது உனக்குள் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் உனக்கே தெரியாமல் ஒழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர வாய்ப்பில்லை உனக்கு.

காரணம்...நீ போர்த்திக் கொண்ட போர்வை அத்தகையது.

நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டவனுக்கு உறக்கத்தைத் தவிர வேறென்ன வரும்?

கடவுள் நம்பிக்கை என்ற போர்வையில் நீ நடமாடிக்கொண்டே உறங்கி வழிகிறாய்.

கால அள்வு தாண்டி உறங்குபவனுக்கு என்ன வரும்? கனவுகள் தான் வரும்!

அந்த கனவுகள் என்ற கடலிலே உன் உழைப்பாற்றலும், நேரமும், திறமைகளும் 'டைட்டானிக்' ஆகிக் கொண்டிருப்பதை நீ அறிய நியாயமில்லை.

ஒரு பொழுது போனால் போதை மயக்கம் போய் விடும்.

ஆனால் கடவுள் மயக்கம் கடைசிவரைக்கும் ஒரு வட்டத்துக்குள்ளேயே உன்னை மடித்துப் போட்டு விடுகிறது.

போகப் போக கடவுள் என்ற கற்பனை உனக்குப் பல சௌகரியங்களை செய்து தந்து உன்னை முன்னேற விடாமல் தடுக்கின்றது.

அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை உன் முயற்சிகளை சுருக்குகிறது. சோம்பலைப் பெருக்குகிறது.

உன் கணக்கில் வந்திருக்க வேண்டிய வசந்தங்களை வழி தவற வைக்கிறது.

கெட்டபின்பு அந்தப் பழியையும் சர்வ சாதாரணமாக கடவுள்மீது தூக்கிப் போட்டு விடுகிறாய்.

கடவுளுக்குக் க்ண்ணில்லையென்றும், கல் மனமென்றும் அவரை 'உனது தராதரத்துக்கு' இறக்கி வந்து இழித்துப் பேசுகின்றாய்.

உனது இயலாமைகளையும்,சோம்பலையும் மூடி மறைக்க மறுபடியும் ஒரு போர்வையைத் தேடுகிறாய்.

'பழைய குருடி கதவைத் திறவடி' என்பது போல மீண்டும் பழைய இருட்டுக்குள் போய் உன்னைப் பரப்பிக் கொள்ளுகிறாய்.

உனது ஒவ்வொரு சறுக்கலுக்கும் நீ மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.

சறுக்கல்களுக்கு கடவுளை சார்ந்தே சமாதானங்களைக் கண்டு பிடித்துச் சொல்லுகின்றாய்.

உனது தோல்விகளுக்குப் பின்னணியில் கடவுள் இருப்பதாகவும்,உன்னைப் பக்குவப்படுத்தவே அவர் அந்தத் தோல்விகளைத் தருவதாகவும், காலப்போக்கில் அவர் உன்னை வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் செல்வார் என்றும் சமாளிக்கப் முயற்சிக்கின்றாய்.

பகல் கனவிலே பல வருடங்களை செலவு வைத்தாய்.

அந்த விரயங்களுக்கும் கூட விரைவில் அவர் நஷ்ட ஈடு தருவார் இரட்டிப்பாக என்று வியாக்கியானம் செய்கிறாய்.

எப்போதாவது அரிதாக ராஜ பல்லாக்குக் கிடைத்தாலும், அதிலும் உறங்கிக் கொண்டு பயணிக்கவே ஆசைப்படுகிறாய்.

உன் உழைப்பாற்றலைச் சுற்றி சோம்பல் புதர்கள் வளர்ந்து நிற்கின்றன.

இருட்டுக்குள்ளேயே உனது உலகம் இயங்கிக் கொண்டிருப்பதால் ஒளித் தொகுப்பு இல்லாமல் உன் திறமைகள் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் உனது கடவுள் நம்பிக்கை தானே?

அதனால் தான் கடவுளை நம்பாதே என்றேன்.

உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கடவுளுக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதில் கொண்டதால் தான், இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை நானும் கடவுள் முக்கியத்துவத்துடன் ஆரம்பித்தேன்.

முன்னுக்கு வர நினைப்பவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது முத்லிலிருந்து கடைசி வரைக்கும் முட்டுக்கட்டையே என்ற எனது கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை.

அதனால் தான் கடவுளை நம்பாதே என்று உறுதியாக உனக்குச் சொன்னேன்.

அப்படியானால் கடவுள் என்ற சிந்தனையே தேவையற்றது என்கிறாயா?
என்று நீ என்னைக் கேட்கலாம்.

[தொடரும்]


No comments: