Wednesday, April 23, 2008

கடவுள் தேவையா?


'இங்கே நிம்மதி' கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயத்தில் 'கடவுளை நம்பாதே' என்றேன்.

அப்படியானால்....கடவுள் தேவையில்லையா? என்று நீ கேட்கலாம்.

அது உனது மனப் பக்குவத்தைப் பொறுத்தது.

நீ வாழுகின்ற சூழலைப் பொறுத்தது.

உனது மன வலிமையைப் பொறுத்தது.

உனது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்ற மருந்து உன்னிடமே இருக்கின்றது என்று நீ நம்பினால்...கடவுள் தேவையில்லை.

என்ன தான் தலைகீழாக நின்றாலும் நடப்பது நடந்தே தீரும் என்கின்ற 'தெளிவு' உன்னிடம் இருந்தால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை.

பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் முயற்சிக்கு மட்டுமல்ல, நேரத்துக்கும் முக்கிய பங்கிருக்கின்றது என்று நீ நம்பினால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை.

'நல்ல நேரம்' என்பதை கடவுளால் உருவாக்கித் தர முடியாது. அது தானாக வர வேண்டும்.

'நல்ல நேரம்' என்று சொல்வது மூட நம்பிக்கை அல்ல. அதை 'நல்ல சூழல்' என்ற அர்த்தத்திலேயே நான் அடையாளம் காணுகிறேன்.

அந்த சூழல் தானாக உருவாகும். எப்போது என்று சொல்வது கடினம்... முன்பின் ஆகலாம்.

இன்று சுழலாக இருக்கும் சூழல்...நாளை தென்றலாகலாம்.

இன்று சோலையாக இருக்கும் சூழல் நாளை பாலையாகலாம்.

இது உனது கையில் இல்லை.

தகுந்த மனோ பலமும், தேர்ச்சியும் உன்னிடம் இருந்தால்....சுழலில் சிக்கினாலும் முத்தெடுத்துக் கொண்டு திரும்பி வருவாய்.

பாலைவனத்தைத் தந்தாலும் அங்கே பயிர் செய்யும் விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கும் கற்றுத் தருவாய்.

உன்னை மையமாக வைத்தே விளைவுகள். வாழ்க்கையின் வளைவுகள்.

அனைத்துக்கும் நீ அதிபதி.

ஆதியும் நீ.... அந்தமும் நீயே...

உன் ஒவ்வொரு சாதனைகளுக்கும், சரிவுகளுக்கும் சொந்தமும் நீயே !

எந்த ஒரு சுகமோ துக்கமோ கடவுளால் உனக்குத் தரப்படுவதில்லை.

எல்லாமே நீ வாங்கி வந்தது...வாங்கிக் கொண்டிருப்பது....வாங்கப் போவது!

உனது கணக்கில் எதை நீ சேமிக்கிறாயோ அதுவே வட்டியும் முதலுமாக உன் கைகளை நிறைக்கின்றது...அல்லது கைகளைக் கட்டி விடுகின்றது!

பொன்னைத் தான் சேமித்தேன்... மிஞ்சியதோ மண்தான் என்று பெருமூச்சு விடுகிறாயா?

அந்தப் பொன்னை எப்படி சேமித்தாய் என்று சிந்தித்துப் பார். மண்ணுக்கான காரணம் கண்டு கொள்வாய்.

நினைவு தெரிந்த நாள்முதல் நேர் வழியில் தான் பயணம் செய்கிறேன்...ஆனாலும் என் பாதையில் தான் நெருஞ்சி முட்கள் நிறைந்திருக்கின்றன. எங்கே கோளாறு? என்று ஏங்குகிறாய்.

ஏங்காதே...சத்தியப் பாதையிலே இது சகஜம்.

ஏன்?... எதற்காக?... என்று கேட்காதே. காரணங்களைக் கற்பனை செய்ய வேண்டி வரும். உனது நேரமும் எனது நேரமும் விரயமாகும்.

எதையும் அதுவாக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள். எல்லாம் நல்லதுக்கே என்று இளகிக் கொள்.

சத்தியமும், நேர்மையும் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை.

உனக்குத் தெரியாத அல்லது உன்னால் விளங்கிக் கொள்ள முடியாத சில காரணங்களால் உனது பாதையில் ' சத்திய சோதனை' தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும்...அதை நீ சோதிக்காதே.....அது உன்னை சோதிக்க அனுமதி.

ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையையும் எரிக்கும் 'சோதி' நீ என்பதை அதற்கு உணர்த்து.

பாரதியின் கம்பீரத்துடன் உனது பாதங்களை இன்னும் உத்வேகத்துடன் பூமியில் அழுத்தமாகப் பதித்து நட.

விழுந்தாலும் வெட்கப்படாமல், நேர்வழியில் தானே விழுந்தேன் என்று முட்களையும், சகதிகளையும் தட்டிக்கொண்டே தடம் மாறாமல் நட.

சத்தியத்தை சந்தேகிக்காதே.

இந்த உலகில் நித்தியமானது சத்தியம் ஒன்று தான். அதுவே நிம்மதியின் சூட்சுமம்.

அன்பு...பண்பு...கருணை...இரக்கம்... தொண்டு....என்று சத்தியத்திற்குத்தான் எத்தனை எத்தனை குழந்தைகள்!

அந்தக் குழந்தைகளில் நீயும் ஒரு குழந்தை என்று அமைதி பெறு. ஆறுதல் கூறு.

சமூகம் மதிக்காத ஒரு சூழலில் நீ வாழ்ந்தாலும் கூட, உன்னுள்ளே 'சுத்தம்' என்று நீ நம்பினால் எந்த சூழலாலும் உன்னை அசுத்தப்படுத்த இயலாது.

சேற்றிலும் செந்தாமரை கறை படாது நிற்கிறது. அசுத்த நீரில் நின்று கொண்டிருந்தாலும்... அதன் வசீகரமும்,தனித்துவமும் அதனால் கலைந்து போவதில்லை... கரைந்து போவதில்லை.

அது போலவே உன்னையும் ஆற்றிக் கொள்.... உற்சாகம் ஊற்றிக் கொள்.

சூழல்கள் உன்னை சிக்க வைக்கப் பார்க்கும்...போராடு.

எதிலுமே உன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாதே.

சத்தியப் பார்வையுடன் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டிருப்பவனுக்கு...அல்லது நிறைவேற்ற முயல்பவனுக்கு 'நோயெதிர்ப்பு சக்தி' அதிகம்.

சமூகத்தின் எந்த ஒரு நச்சுக் கிருமியாலும் அவன் ஆரோக்கியத்தை அபகரிக்க முடியாது.

'கடவுள்' என்ற சிந்தனையே இல்லாமல் பல சிகரங்களை அவனால் கடக்க முடிகிறது. புதிய வரலாறுகளை அவனால் புகுத்த முடிகிறது.
[தொடரும்]

No comments: